Close

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

வழிபாட்டு நேரம்:

காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 09.30 மணி வரை

மதுரைக்கு ஒத்த பெயர் பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது. ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பழையானதும் ஆகும். இந்தக் கோவில், பல இராஜ பரம்பரை ஆண்டு வந்தபோதிலும், அவரவர் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இதன் மொத்தப்பரப்பு 65000 சதுர மீட்டர் ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இக்கோவில் கி.பி. 1623-1655 ஆண்டுகளில் ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சிறந்த விரிவாக்கம் பெற்றது.

இறைவன் சிவபெருமான் மனித உருவில் சுந்தரேஸ்வரராக அவதாரம் செய்து, கயல் போன்ற கண்களை உடைய மீனாட்சியை வாழ்க்கைத் துணையாக ஏற்று மகிழ்ந்தார். இவர்களுக்கென்று இரு கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவிலைச் சுற்றி மிகப்பெரிய நான்கு வாயில்கள் உள்ளன. இங்கே வருகை தரும் அன்பர்கள் கட்டுமானங்களில் காணப்படும் வண்ணமயமான சிற்பங்களைக் கண்டு வியக்கின்றனர்.

இக்கோவிலில் அதிசயக்கத்தக்க பிரம்மாண்டமான ஒரு காட்சி ஆயிரங்கால் மண்டபம். இம்மண்டபத்தில் ஆயிரம் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கலைநயமிக்க சிற்பங்களுடன் உறுதி வாய்ந்ததாக அமைந்துள்ளது. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் தூண்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும். அதன் நடைவழியில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. அதன் நுழைவாயில் அருகில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் தட்டினால் வெவ்வேறு ஒலி எழுப்பும் நுணுக்கங்களைக் கொண்ட கலை படைப்பாகும்.

புகைப்பட தொகுப்பு

  • பரந்த அழகான கோபுர தோற்றம்
  • இரவில்
  • தங்க கோபுரம்

செல்வது எப்படி:

வான் வழி

மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

தொடர்வண்டி வழி

மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், புதுதில்லி, மும்பை, கொல்கொத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் இங்கிருந்து நேரடி தொடா்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

சாலை வழி

தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன.

வீடியோ